

தொகுதிப் பங்கீடு இதுவரை முடிவாகாத நிலையில், காரைக்குடி முழுவதும் மக்களிடம் வாக்குக் கேட்டு பாஜகவினர் பேனர் வைத்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதி யான நிலையில் இருதரப்பிலும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாஜக 35 முதல் 40 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாஜகவுக்கு 20 முதல் 21 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தலைமை தரப்பில் கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 35 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டுமென பாஜக கூறி வந்த நிலையில், அதிமுக 25 தொகுதி கள் ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக அமைச்சர்கள் வென்ற தொகுதிகள், அதிமுக முக்கிய நபர்கள் விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்பதால் தொகுதிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காரைக்குடி தொகுதியில் போட்டியிட அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன் காய் நகர்த்தி வருகிறார். அவர் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வென்றார். அதேபோல் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து தொகுதியை விட்டுக் கொடுத்த பி.ஆர்.செந்தில்நாதனுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுப் பதாக அதிமுக தலைமை உறுதி அளித்தது.
இதனால் காரைக்குடி தொகுதி தனக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்களுக்கு முன்பே செந்தில்நாதன் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கரோனா காலத்தில் காரைக்குடியில் மக்களுக்கு இலவசமாக காய்கறிகள், மளிகைப் பொருட்களை வழங்கினார். ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கினார்.
இதற்கிடையே, சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பாஜக வுக்கு காரைக்குடி தொகுதியை ஒதுக்கி விட்டதாக அக்கட்சியினரே தகவல் பரப்பி வருகின்றனர்.
மேலும் காரைக்குடி நகர் முழுவதும் ஆங்காங்கே கட்சி சின்னம் வரைந்த பேனர்களும் வைத்துள்ளனர்.
தொகுதியே ஒதுக்காதநிலையில் பாஜகவினர் மக்களிடம் வாக்குக் கேட்டு வருவதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள், பாஜகவினர் கூட்டணி தர்மத்தை மீறிச் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.