Published : 28 Feb 2021 10:42 AM
Last Updated : 28 Feb 2021 10:42 AM

அதிமுக கூட்டணியில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் பா.ம.க., தே.மு.தி.க.,  

சவால் நிறைந்த ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அமைச்சர் களாக இருந்த ஐ.பெரியசாமி(திமுக), நத்தம் ஆர்.விசுவநாதன்(அதிமுக) ஆகியோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டதால் விஐபி தொகுதியாகியது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கடும்போட்டியில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி வெற்றிபெற்றார். வலுவான வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனை அதிமுக சார்பில் போட்டியிட செய்தும் ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக தோல்வியடைந்தது. இந்நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தே.மு.தி.க.

ஆத்தூர் தொகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணியில் இடம்பெறவுள்ள பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஐ.பெரியசாமியை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க., சார்பில் பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக உள்ளார். இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. எனவே அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிகவிற்கு தொகுதி ஒதுக்கப்படும்நிலையில் வேடசந்தூர் அல்லது ஆத்தூர் தொகுதியை கேட்டுப்பெற தேமுதிக தலைமை முடிவு செய்துள்ளதாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி

கடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ம.க, போட்டி
யிட்டது. இதனால் பா.ம.க., கட்சியின் சின்னம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பரிட்சயமானது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதியை கேட்டுப்பெற பா.ம.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் இந்த தொகுதிகளில் மீண்டும் அதிமுக போட்டியிட உள்ளது. இதனால் ஆத்தூர் தொகுதியை கேட்டு பெற பா.ம.க., தலைமை முடிவு செய்துள்ளதாக திண்டுக்கல் மாவட்ட பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர். ஆத்தூர் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட கட்சித்தலைமையிடம் வழக்கறிஞர் சிவக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் கோகிலா ஆகியோர் விருப்பமனு கொடுத்துள்ளனர்.

ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை தோல்வியை தழுவிய அதிமுக இந்த முறை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டாது என்றே கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x