

பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம் பிரேசிலின் அமேசானியா உள்ளிட்ட 19 செயற்கைக் கோள்கள் இன்று காலை விண்ணில் ஏவப்படுகின்றன.
பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19செயற்கைக் கோள்கள் கல்விசார் மற்றும் வர்த்தகரீதியில் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம்ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்படுகின்றன. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
இது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிகரீதியாக செலுத்தப்படும் முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா, 637 கிலோ எடை கொண்டது. ஆயுட்காலம் 4 ஆண்டுகள். புவி ஆய்வு,அமேசான் காடுகள் கண்காணிப்பு இதன் முக்கிய பணி.
இதுதவிர, இஸ்ரோவின் சிந்துநேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாஅமைப்பின் சதிஷ் தவான் சாட்,உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் உள்ளிட்ட 5 செயற்கைக் கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக் கோள்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
கரோனா பரவல் காரணமாக, ராக்கெட் ஏவப்படுவதை ஊடகங்கள், பொதுமக்கள் நேரடியாக பார்வையிட அனுமதி இல்லை. முகநூல் உட்பட சமூக வலை தளங்களில் நேரலையாக ஒளி பரப்பு செய்யப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.