

தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக, திமுகவினர் சுவர்களில் சின்னங்களை வரைந்து இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.
வழக்கம்போல், பல்லாண்டு வாழ்க என்ற வாசகங்கள் இடம்பெறும். தற்போது நான்கரை ஆண்டுகள் முடிந்து தேர்தலை நோக்கி நாட்கள் நகருவதால் அதிமுகவினர் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கும் நோக்கில் இரட்டை இலை சின்னங்களையும் வரைந்து சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.
இதற்குப் போட்டியாக, திமுக மாநில பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். வரும் மார்ச் 1-ம் தேதி ஸ்டாலின் பிறந்த நாள் ஆகும். இதனால் அக்கட்சியினர் திமுகவின் சின்னமான உதயசூரியனை வரைந்து சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.
சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பொதுமக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும், சின்னத்தை மனதில் பதிய வைப் பதற்காகவும் இப்போதே, அதுவும் அரசு சுவர்களில் விதிமீறி வரையத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.