Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

பேராசையால் இயற்கையை அழித்துவிட்டான் மனிதன்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து

மனிதன் தன்னுடைய பேராசைகளால், சக மனிதனை மட்டுமின்றி இயற்கையையும் அழித்துவிட்டான் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறினார்.

வெற்றி அமைப்பின் ‘வனத்துக்குள் திருப்பூர்' 6-வது ஆண்டு நிறைவு, 7-வது ஆண்டு நர்சரி தொடக்கம் மற்றும் சூழலியல் ஆய்வறிக்கை வெளியீடு, திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

வெற்றி அமைப்பின் தலைவர் டி.ஆர். சிவராமன் பேசும்போது, “6 ஆண்டுகளுக்கு முன்பு மரக்கன்றுகள் நடத் தொடங்கி பராமரித்தோம். தற்போதுவரை பத்தரை லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இங்கு வந்துள்ள பலர் மழைநீரை சேமித்து குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வருபவர்கள். இயற்கையை நோக்கி வாழ்க்கையை நகர்த்த வேண்டிய காலம் இது என்பதை, கரோனா உணர்த்தியுள்ளது” என்றார்.

‘ஓசை' அமைப்பின் நிறுவனர் காளிதாசன் பேசும்போது, “பத்தரை லட்சம் மரக்கன்றுகளை நட்டதுடன், அவற்றை வளர்த்து பராமரிப்பது அர்ப்பணிப்புப் பணி. இதனை ‘வனத்துக்குள் திருப்பூர்' செய்துள்ளது” என்றார்.

சிறப்பு அழைப்பாளரான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசும்போது, “உலகத்துக்கே ஆடை வழங்கும் பணியை திருப்பூர் செய்து வருகிறது. திருப்பூரில் ஒரு குட்டி அரசாங்கமே நடைபெறுகிறது. அதற்கு உதாரணம்தான் ‘வனத்துக்குள் திருப்பூர்'.

இயற்கையை மறந்ததால்தான் இன்றைக்கு நோய் அதிகமாகிறது; மாசு அதிகரிக்கிறது. மண்ணில் மரங்களை வளர்த்தால், மனிதன்நன்றாக வாழ முடியும். மரக்கன்றுகளை நட்டுவிடலாம். அதனை பாதுகாப்பதுதான் முக்கியம். இந்த இயக்கம், தமிழகம் மட்டுமின்றி நாடெங்கும் பரவ வேண்டும்.

மனிதன் தன்னுடைய பேராசைகளால், சக மனிதனை மட்டுமின்றி இயற்கையையும் அழித்துவிட்டான். மரம் வளர்ப்பது உலகத்தின் உயிர்களை காக்கும் பணி. இதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்க, கேரளாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அங்கிருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகம் கொண்டுவரப்படுகின்றன. இங்கிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது. நாம் திருந்தினால்தான் இயற்கையை பாதுகாக்க முடியும். இயற்கை வளங்களை குறைவாகப் பயன்படுத்துவது சமூகக் கடமை. மலைகளை பாதுகாத்தால்தான் மரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களால் பூமியில் வாழ முடியும்” என்றார்.

இதையடுத்து ‘வனத்துக்குள் திருப்பூர்' சூழலியல் ஆய்வறிக்கையை வெளியிட்டார். வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.சுந்தரேசன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன், ‘வெற்றி’ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x