

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதேவேளையில், இந்த வழக்கு விசாரணையை எஸ்பி மற்றும் டிஐஜி நேரடி மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நீதிவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. மனுதாரர் சார்பில் வைகோவும், அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தியும் வாதிட்டனர்.
இந்த நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அதேவேளையில், இந்த வழக்கு விசாரணை, எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் விசாரணை அறிக்கையை குறிப்பிட்ட நீதிமன்றத்தில் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.