

பொள்ளாச்சி ஆனைமலையில், நெல் வயல்கள் தற்போது மாற்றுப் பயிர் சாகுபடிக்கு தயார்படுத்தப்படுகின்றன. இதனால், பாரம்பரியமிக்க ஆனைமலை கரவெளி தன்னுடைய பெருமையை இழந்து வருகிறது.
ஆழியாறு ஆற்று நீரினை, பழமைமிக்க 5 ஆயக்கட்டு வாய்க்கால்கள் மூலம் வயல்களில் பாய்ச்சி, குறுவை, சம்பா, தளாடி என முப்போகம் விளைவித்த ஆனைமலை கரவெளியின் நெல் சாகுபடி நடந்த வயல்வெளிகள், தற்போது மாற்று பயிர்களுக்கு தயார்படுத்தப்படுகின்றன.
வடக்கலூர் அம்மன் வாய்க்கால் வயல் பகுதியில் கடந்த சில போகங்களாக நெல் சாகுபடியில் போதிய வருவாய் இல்லாமல் இருந்த விவசாயிகள், மாற்றுப்பயிராக இஞ்சியை தேர்ந்தெடுத்து பயிர் செய்துள்ளனர்.
இது குறித்து நெல் விவசாயி பட்டீஸ்வரன் கூறும்போது, ஆனைமலை பகுதியில் தற்போது நெல் விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. 6,400 ஹெக்டர் பரப்பளவில் நடந்த நெல் சாகுபடி தற்பொது 1,100 ஹெக்டர் பரப்பளவுக்கு குறுகிவிட்டது. நிரந்தர கொள்முதல் நிலையம் மட்டும் அரசு ஏற்படுத்தி கொடுத்தால் போதாது நெல்லுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் மாற்றுப்பயிருக்கு மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்’ என்றார்.
ஆனைமலை உதவி வேளாண் இயக்குநர் எம்.சிவக்குமார் கூறும்போது, ‘நெல்லில் சராசரியான மகசூல் கிடைத்தாலும், வேலையாட்கள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் இழப்பு ஏற்படுவதாகக் கூறுகின்றனர். பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டம் போன்றவற்றால் நெல் பயிரிடும் பரப்பு குறைந்து வருகிறது’ என்றார்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலர் ஆர்.வசுமதி கூறும்போது, ‘கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள ஈரப்பதமுள்ள உஷ்ண மண்டலப் பகுதிகளில், நல்ல வடிகால் வசதியுள்ள, களிமண் கலந்த மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது மலைப்பயிர் இஞ்சி. ஆண்டு முழுவதும் தேவையுள்ள பொருள் என்பதால் அதன் விற்பனையில் பிரச்சினை இருக்காது. தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சமவெளிப் பகுதியில் இஞ்சி சாகுபடி நடந்து வருகிறது. இஞ்சியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பெறலாம்’ என்றார்.
சாகுபடிமுறை பற்றி விவசாயி கே.சி.சரவணன் கூறும்போது, ‘இஞ்சி சாகுபடியில் இருவகை உள்ளது. பச்சை இஞ்சியாக விற்பனை செய்ய, விதைத்த 6-வது மாதம் முதல் அறுவடை செய்வது ஒரு வகை. 10 மாதம் விளைந்த இஞ்சியை அறுவடை செய்து சுக்காக தயாரித்து விற்பனை செய்வது இரண்டாவது வகை. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 60 கிலோ எடை கொண்ட 150 மூட்டை கிடைக்கிறது. சந்தையில் ஆண்டு சராசரி விலை ஒரு கிலோ ரூ.30 ஆகும். இதுவே சுக்கா மாற்றி விற்கும்போது கிலோ ரூ.180 வரை விற்பனையாகிறது’ என்றார்.