

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 1-ம் தேதி (நாளை) குண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று காலையில் ஒரு கடிதம் வந்தது. அதில், “சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், டிஜிபி அலுவலகம், கொச்சிவிமான நிலையம் ஆகிய இடங்களில் குண்டு வெடிக்கும். வரும் 1-ம் தேதி(நாளை) குண்டு வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்றுஅதில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். டிஜிபி அலுவலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கும் இந்த மிரட்டல் கடிதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதத்தில் இருந்த அனுப்புநர் முகவரி போலியானது என்று போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இன்றும், நாளையும் தீவிர சோதனைகளை மேற்கொள்ள போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.