Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் தேர்தல் களம் இறங்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விருப்பமனு அளித்ததையடுத்து, அதிமுகவினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பஷீர் அகமதுவை 20,719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இம்முறை தேர்தலில் போட்டியிடுவாரா என பல சந்தேகங்கள் கட்சிக்குள்ளேயே கிளப்பப்பட்டது. அவரது வாரிசுகளில் ஒருவர் போட்டியிட ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக தகவல்கள் பரவின.

இதனால் பலரும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பிக்க முடிவு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் போட்டியிட மாட்டார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விருப்ப மனு பெறத்தொடங்கிய முதல் நாளிலேயே திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சித்தலைமையிடம் மனு அளித்துள்ளார் திண்டுக்கல் சி.சீனிவாசன்.வேறு நபர்கள் போட்டியிட்டால் கோஷ்டி பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் மீண்டும் அமைச்சர் சீனிவாசனே போட்டியிடுகிறார் என்கின்றனர் கட்சியினர்.

திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முன்னதாகவே இவரது அண்ணன் மகனும் ஒன்றிய செயலாளருமான ராஜசேகர் தலைமையில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். கிராமப்புறங்களில் சாலை அமைப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த முறையும் வெற்றிபெற தேவையான ஏற்பாடுகளை கிராமப் பகுதிகளில் செய்துவந்தாலும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அதிமுகவினர் தேர்தல் பணிகளை இன்னமும் தொடங்காமல் இருந்தனர்.

தற்போது அமைச்சர் விருப்ப மனு அளித்துள்ளதால் திண்டுக்கல் மாநக ராட்சியில் அதிமுகவினரின் தேர்தல் பணிகள் இனி முழுவீச்சில் தொடங்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் களம் இறங்க உள்ள நிலையில், இவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த திமுக கட்சித் தலைமை வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக நேரடியாக களம் இறங்கும் என கட்சித் தலைமை அறிவித்ததையடுத்து திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. கடந்த முறை போல் இந்தமுறை தொகுதியை பறிகொடுக்காமல் வெற்றிபெற திமுகவினர் முயற்சிக்கின்றனர். ஆனால் கடந்த முறைபோல் இந்தமுறையும் வெற்றிபெற அதிமுகவினர் முழு முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x