

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து அரசியல் கட்சியினர் வைத்த பேனர்களையும் கொடிகளை யும் விடிய, விடிய அகற்றும் பணியில் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சி யர்கள் உத்தரவின்பேரில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பேனர்கள், கொடிகளை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பேனர், கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வாகனங்களுடன் சென்று விடிய, விடிய பேனர்களையும் கொடிகளையும் அகற்றியதுடன் அரசியல் கட்சியினர் வரைந்துள்ள சுவர் விளம்பரங்களை அழித்தனர். பொது இடங்களில் ஒட்டியிருந்த சுவரொட்டிகளையும் அகற்றினர்.
வேலூர் மாநகராட்சியில் உள்ள4 மண்டலங்களிலும் பேனர் அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. அதேபோல், வட்டாட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் தலைமையிலான குழுவினரும் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் சென்று பேனர்கள் அகற்றும் பணியை தீவிரப்படுத்தினர். அதேபோல், அரசியல் தலைவர்களின் சிலை களையும் மூடி வைத்தனர்.
சோதனை சாவடிகளில் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்கும் நோக்கில் 14 இடங்களில் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.
மாவட்ட எல்லைகளில் உள்ள ஒவ்வொரு சோதனை சாவடியிலும் காவல் துறையினர் வாகனங்களை முறையாக தணிக்கை செய்கிறார்களா? என்பதை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் கூட்டாகச் சென்று திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
அப்போது, தேர்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்தும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குள் வரும் வாகனத்தை தீவிரமாக சோதனை செய்யவும் அறிவுறுத்தினர்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக சட்டப்பேரவை உறுப் பினர்களின் அலுவலகங்கள் பூட்டி ‘சீல்' வைக்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர்கள் தலைமையிலான குழுவினர் அந்தந்தந்த பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களை பூட்டி ‘சீல்' வைத்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர்.
இந்தப் பணி இன்று அல்லது நாளைக்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. வேலூர் அண்ணா சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் நேற்று ‘சீல்' வைக்கப்பட்டது.