அதிமுக- பாமக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: கள்ளக்குறிச்சியில் தேமுதிக பலத்தைத் திரட்டிய பிரேமலதா

அதிமுக- பாமக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: கள்ளக்குறிச்சியில் தேமுதிக பலத்தைத் திரட்டிய பிரேமலதா
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகிய நிலையில் தமிழகக் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்தி தொகுதிப் பங்கீட்டை முடித்து வருகின்றன. முதல்கட்டமாகத் திமுகவுடன் காங்கிரஸ் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 20 தொகுதிகளை திமுக தர முன்வந்த நிலையில்,காங்கிரஸ் தலைமை சோகத்துடன் அறிவாலயத்தை விட்டு வெளியேறியது.

அதைத் தொடர்ந்து அதிமுக- பாமக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, இதுவரை அக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக தலைவர்களைத் தேமுதிக சார்பில் யாரும் சந்திக்காமல் இருந்து வந்தனர். மேலும் அதிமுக தலைமை மீது பிரேமலதா அதிருப்தியில் இருந்து வந்தார். பாமகவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேமுதிகவிற்கு வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் சூசகமாகத் தெரிவித்து வந்தார்.

இதனிடையே இன்று பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டபோது, பாமக வலுவாக உள்ள வட மாவட்டங்களில் தேமுதிகவிற்கு இருக்கும் பலத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காகக் கள்ளக்குறிச்சியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார் பிரேமலதா.

இக்கூட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதாவிற்கு விழுப்புரம் மாவட்டம் தொடங்கி கள்ளக்குறிச்சி மாவட்டம் வரை தொண்டர்கள் புடைசூழ வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் பயணித்து கூட்ட அரங்கிற்குச் சென்றார் பிரேமலதா. வழிநெடுகிலும் தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தவாறு சென்ற பிரேமலதாவிற்கு, தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக தலைமை, தேமுதிகவிற்கு அளிக்கும் முக்கியத்துவம் குறைந்து வருவதாலும், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிகத் தொகுதிகள் பெறும் வகையில் வட மாவட்டங்களில் பாமகவை விடத் தேமுதிகவின் பலம் அதிகம் என்பதை நிரூபிக்கும் வகையில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியகியுள்ளது.

அதேபோல விஜயகாந்த் வந்தால் எந்த அளவுக்கு வரவேற்பு அளிக்கப்படுமோ அந்த அளவுக்கு பிரேமலதாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படவேண்டும் என்றும் கட்சியினர் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in