Published : 27 Feb 2021 06:09 PM
Last Updated : 27 Feb 2021 06:09 PM

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு; மாநில அரசின் வரிவிதிப்பு மட்டுமே காரணம் இல்லை: பேரவையில் ஓபிஎஸ் விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்

சென்னை

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிவிதிப்பு மட்டுமே காரணம் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) கலைவாணர் அரங்கில், சட்டப்பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து அவர் பேசியதாவது:

"பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வுக்கு, மாநில அரசே காரணம் என்று ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. அத்தகைய கருத்தில் சிறிதளவும் உண்மை இல்லை. அத்தகைய கருத்து முழுவதும் தவறு என்று நிரூபிப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

உலகப் பொருளாதார வளர்ச்சியானது, சுழல்முறை வேறுபாடுகளின் காரணமாக அண்மைக் காலங்களில் குறைந்து வருகிறது. இந்த நிலை தற்போது உலகெங்கிலும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்றுநோயுடன் இணைந்ததன் விளைவாக, உலகச் சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, உலகச் சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும் மற்றும் பெட்ரோலிய கச்சா மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் அசாதாரண மாற்றங்களை வருங்காலங்களில் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்த்த தமிழக அரசு, சென்ற வருடமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

எதிர்வரக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே தீவிரமாக ஆராய்ந்து, அதற்கேற்ப திட்டமிட்டு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விகிதத்தினை பொதுமக்களை பாதிக்காத வண்ணம் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.

பெரும்பான்மையான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியானது, அவற்றின் சந்தை விலையின் மதிப்பின்மீதுதான் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மதிப்பீட்டின்படியான வரி விகிதமானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையில் ஏற்றம் ஏற்படும்போது, அது பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் வரிச்சுமையை ஏற்படுத்தக்கூடும்.

இதனைக் கருத்தில்கொண்டுதான் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோருக்கு எதிர்மறையான பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கும், அதேசமயம் மாநிலத்திற்கு கிடைக்கக்கூடிய வரி வருவாயில் மிகுந்த அளவு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதத்தினை மாற்றி அமைப்பதென தமிழக அரசு முடிவு செய்தது. அதாவது, 'விலைமதிப்பின்' மீது மட்டும் வரிவிதிப்பு என்பதை மாற்றி, 'விலைமதிப்பு மற்றும் குறிப்பிட்ட வரி விகிதத்தின் அடிப்படையில்' வரி விதிப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், பெட்ரோல் மீதான விற்பனை வரியை, முன்பிருந்த 24 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் விலை மதிப்பின் மீதும், அதனுடன் லிட்டருக்கு ரூ.13.02 என குறிப்பிட்ட வரியாகவும், சீரமைக்கப்பட்டது. அதேபோல, டீசல் மீதான விற்பனை வரியை, முன்பிருந்த 25 சதவீதத்தில் இருந்து 11 சதவீதம் விலை மதிப்பின் மீதும், அதனுடன் லிட்டருக்கு ரூ.9.62 குறிப்பிட்ட வரியாகவும், சீரமைக்கப்பட்டு, 4-5-2020 முதற்கொண்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பழைய முறையைப் பின்பற்றியிருந்தால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும்பொழுது, மாநில அரசுக்கு அதிக வரி வருவாய் வருவதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால், மக்களை இந்த விலை உயர்விலிருந்து பாதுகாப்பதற்காக, தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி முறையை மாற்றியமைத்தது.

உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டபோதெல்லாம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, பெட்ரோலியப் பொருட்கள் மூலமாகப் பெறப்படும் வரி வருவாயைத் தக்க வைக்கும் பொருட்டு, மத்திய அரசு இப்பொருட்களின் மீதான கலால் வரியை பலமுறை உயர்த்தியுள்ளது.

அதே சமயம், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லரை விலை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மாநில அரசு பெற்று வந்த பெட்ரோலியப் பொருட்கள் மீதான வணிக வரியானது கணிசமாகக் குறைந்தது. எனினும், தமிழ்நாட்டில் 2011 முதல் 2017 மார்ச் வரை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெட்ரோலியப் பொருட்கள்மீது, மத்திய அரசால் பல வரிகளும் மற்றும் மேல் வரிகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அவற்றின் மீதான விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிவிதிப்பு மட்டுமே காரணம் இல்லை. ஒருபுறம், பெட்ரோலியப் பொருட்கள் மூலமாகப் பெறப்படும் வரி வருவாயைத் தக்க வைக்கும் பொருட்டு, மத்திய அரசு இப்பொருட்களின் மீதான கலால் வரியை கடந்த ஆண்டுகளில் பலமுறை உயர்த்தியுள்ளது.

அதே சமயம், ஏப்ரல் மாதம் 2017 அன்று ரூ.9.48 என்று மத்திய அரசால் பெட்ரோல்மீது விதிக்கப்பட்டு வந்த கலால் வரியானது, மே மாதம் 2020 அன்று ரூ.2.98 ஆக குறைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 2017 அன்று ரூ.12 என்றிருந்த மேல் வரி மற்றும் உபரி வரியானது படிப்படியாக மே மாதம் 2020 அன்று ரூ.30 ஆக மத்திய அரசால் உயர்த்தப்பட்டது.

அதேபோன்று, டீசல் மீதான கலால் வரியும் ஏப்ரல் மாதம் 2017 அன்று ரூ.11.33 என்றிருப்பதை மே மாதம் 2020 அன்று ரூ.4.83 ஆக குறைக்கப்பட்டது. அதன் மீதான மேல் வரி மற்றும் உபரி வரியினை ஏப்ரல் மாதம் 2017 அன்று ரூ.6 என இருந்ததை மே மாதம் 2020 அன்று ரூ.27 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியினை மேலும் குறைத்து, அதற்குப் பதிலாக புதிய வரிகளை விதிக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, மத்திய வரியினை மேல் வரியாகவும், உபரி வரியாகவும் மாற்றியதன் காரணமாக மாநில அரசுக்கு மத்திய வரியிலிருந்து கிடைக்க வேண்டிய வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிகர வரி வருவாயானது, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில், மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், மத்திய அரசால் விதிக்கப்படும் மேல் வரி மற்றும் உபரி வரி ஆகியவை, மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசால் விதிக்கப்படும் மேல் வரி மற்றும் உபரி வரியானது, முழுவதும் மத்திய அரசுக்கே சென்றடைகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டில், மத்திய அரசின் வருவாய் 48 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில், 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீர்வையின் பங்கு 39.40 சதவீதமாக குறைந்துள்ளது.

மாநிலத்திற்கான சொந்த வரி வருவாய்க்கான நிதி ஆதாரங்கள் சொற்பமாக இருக்கும் நிலையில், மத்திய அரசுதான் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியினைக் குறைத்திட முன் வரவேண்டும் என்று மத்திய அரசை நாம் இன்றைக்கு வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்".

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x