

‘‘தமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி வந்தால், மத்திய அரசுத் திட்டங்களை முடக்குவர்,’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தவில்லை.
அதேபோல் தமிழகத்திலும் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி வந்தால் மத்திய அரசுத் திட்டங்களை முடக்குவர்.
பெண்களுக்கு புற்றுநோய், நுரையீரல் பிரச்சினையை தடுக்கவே மத்திய அரசு இலவச எரிவாயு இணைப்பு வழங்கி வருகிறது. இதுவரை 9 கோடி பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூன்றில் 2 பங்கு பெருபான்மையோடு எங்கள் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
திமுக ஆட்சியில் பெண்கள், டீக்கடைகாரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பல்லாயிரக்கணக்கான திமுவினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு மரியாதை கொடுத்தால் போதும். பொறுப்போ, பதவியோ தேவையில்லை என்கின்றனர். திமுக கட்சி கருணாநிதி குடும்பத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
யார் என்ன பேச வேண்டும், யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை பிரஷாந்த் கிஷோர் முடிவு செய்கிறார். இதனால் திமுக தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.