

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவின் மேற்கூரையின் காரை பூச்சு நேற்று திடீரென பெயர்ந்து விழுந்தது.
இந்த மருத்துவமனை குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவத்துக்கு மட்டுமென உள்ள தனி அரசு மருத் துவமனையாகும். இங்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் நாள்தோறும் சிகிச்சைக்கு வருகின் றனர்.
இந்த மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் நல வார்டில் நேற்று மதியம் 2 மணியளவில் குழந்தைகள், பெற்றோர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள் இருந்தபோது, திடீரென அறுவை சிகிச்சை பிரிவுக்கு செல்லும் பாதையின் மேற்பகுதி காரை பூச்சு 10 அடி அகலம், 20 அடி நீளம் அளவுக்கு பெயர்ந்து விழுந்தது.
காரை பூச்சு விழுந்த நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.