

தமிழக முதல்வர் பழனிசாமிக்குக் கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்யும் அதிகாரமில்லை என, கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் உதகையில் இன்று (பிப்.27) நிருபர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ, அதேபோல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
அதிமுக என்ன கைங்கரியம் செய்தாலும் மக்கள் மத்தியில் செல்லுபடியாகாது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் அடித்தட்டு மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. அடித்தட்டு மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே தேர்தல் அமைதியாகவே நடந்திருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலும் அதேபோன்று அமைதியாகவே நடக்கும். நான் இதுவரை 11 தேர்தல்களைச் சந்தித்துள்ளேன். மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏதும் செய்ய முடியாது.
2019-ம் ஆண்டு தேர்தலின்போது இந்தியா முழுவதும் தேர்தலில் ஒரு சூழல் நிலவியது. ஆனால், தமிழகத்தில் மட்டும் வேறுவிதமான சூழல் நிலவியது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தது. இது பாஜகவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே கோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இதுபோன்று ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரும்போது, அங்கு காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது என்பதால், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதுச்சேரியில் பொதுமக்கள் நிச்சயமாக பாஜகவை நிராகரிப்பார்கள்.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்பது ஏமாற்று வேலை. கூட்டுறவு வங்கிகள் தற்போது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்கிறாரா அல்லது கடனைச் செலுத்துகிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அவருக்குத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் இல்லை.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மூன்று தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்".
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.