Published : 27 Feb 2021 02:18 PM
Last Updated : 27 Feb 2021 02:18 PM

ஜாக்டோ- ஜியோ மாநில மாநாடு ஒத்திவைப்பு: அவசரக் கூட்டத்தில் தீர்மானம்

ஜாக்டோ- ஜியோ மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்ட அவசரக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த‌ன. இந்தச் சூழ்நிலையில், நாளை (பிப்.28) நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ-ஜியோ மாநில மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் இன்று (பிப்.27) காலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மாநில மாநாட்டை ஒத்திவைப்பது எனவும், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன், வரும் மே மாதத்தில் ஜாக்டோ- ஜியோ கோரிக்கை ஏற்பு மற்றும் உரிமைகள் மீட்பு தொடர்பான வெற்றி மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில மாநாடு நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x