

கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ.கருப்பையா, கலாம் ஆலோசகர் பொன்ராஜ், செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோருக்கு மக்கள் நீதி மய்யத்தில் புதிய பொறுப்புகளை கமல் அறிவித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கமல் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில் நல்லவர்கள் எங்களுடன் இணையலாம் என்று கமல் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கமலுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மவுரியா உள்ளிட்டோர் இணைந்தனர். சமீபத்தில் சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். இன்று பழ.கருப்பையா, செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நிர்வாகக் குழுவில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்குழுவின் தலைவராக கமல் இருப்பார். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பொன்ராஜ், பழ.கருப்பையா, செந்தில் ஆறுமுகம், ஆர்.ரங்கராஜன், சுரேஷ் ஐயர் ஆகியோருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.