Last Updated : 27 Feb, 2021 01:43 PM

 

Published : 27 Feb 2021 01:43 PM
Last Updated : 27 Feb 2021 01:43 PM

நாம் இருவர்; நமக்கு இருவர்: தூத்துக்குடி பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா; அம்பானி, அதானியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

நாம் இருவர் நமக்கிருவர் என்ற கொள்கையோடு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இரண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே உதவியாக இருப்பதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

அங்கு வழக்கறிஞர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

வழக்கறிஞர்களின் கேள்விகளை எதிர்கொள்ளும் முன் பேசிய ராகுல் காந்தி, "ஒரு தேசம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புகள், பஞ்சாயத்து அமைப்புகள், இன்னும் பல அரசியல் சாசன அமைப்புகளால் ஆனது. இந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்படும் போதுதான் தேசம் சமநிலையுடன் இருக்கும். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகளின் மீது மத்திய அரசு திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. நாட்டின் அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தையும் பாஜக சீரழித்து வருகிறது.

நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆனால், இன்று மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. அதனால், என்னை பாஜகவால் சிபிஐ, அமலாக்கப்பிரிவு மூலமாக அச்சுறுத்த முடியாது.காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் எம்எல்ஏ.,க்களை விலை கொடுத்து வாங்குகிறது பாஜக. எம்எல்ஏ.,க்களை அதிகார பலம், பண பலத்தால் கட்சி மாற வைக்கிறது பாஜக. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக" என்றார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். பிரதமர் இத்தேசத்துக்கு பயனற்றவராக இருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, நீங்கள் பிரதமர் மோடி பயனற்றவராக இருக்கிறார் என்று கூறினீர்கள். நான் அதில் சிறு திருத்தம் செய்ய விரும்புகிறேன். இங்கே ஒவ்வொரு மனிதரும் யாரேனும் ஒருவருக்கு உதவியாகத் தான் இருக்கிறோம். நான் விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்றால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்நாட்டில் இருவருக்கு ( அம்பானி, அதானி) மிகப்பெரிய உதவியாக இருக்கிறார்கள். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையில் அவர் உதவியாக இருக்கிறார் என்று கூறினார்.

அவரின் இந்த பதிலுக்கு வழக்கறிஞர்கள் பலத்த ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

கூட்டத்தில் மேலுமொரு வழக்கறிஞர், இந்தியாவில் மதச்சார்பின்மை சேதப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய ராகுல் காந்தி, நிச்சயமாக. மதச்சார்பின்மை நம் அரசியல் சாசனத்தின் அடிநாதம் மட்டுமல்ல. அது தேசத்தின் கலாச்சாரம். பாஜக அரசு மதச்சார்பின்மையை சிதைத்துவிட்டது என்றார்.

விவசாயிகள் போராட்டம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தை பாஜக அரசு நெறிக்கிறது என்றார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கேள்வி கேட்பவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. நீதித்துறை, ஊடகம் என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்து விட்டது.

மோடியும், அமித் ஷாவும் நாட்டில் இருவர் நலனுக்காகவே மட்டுமே செயல்படுகின்றனர். ஆனால், காலம் வரும். அப்போது இந்த இருவரும் தூக்கி எறியப்படுவர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x