

தூத்துக்குடியில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு காலை 11.45 மணிக்கு வந்து இறங்கினார்.
அவரை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி பிரசாரத்தை முன்னிட்டு ரோட்டின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள் வரிசையாக கட்டப்பட்டு இருந்தன.
வரவேற்பு பதாகைகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் இடங்களில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் தூத்துக்குடி விழாக்கோலம் பூண்டு இருந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவெல்ல பிரசாத், மாணிக்கம்தாகூர், டாக்டர் செல்லக்குமார் எம்.பி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாசன் மவுலானா, மாநில மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் , மாநில காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, ராணிவெங்கடேசன், தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.