Published : 27 Feb 2021 01:27 PM
Last Updated : 27 Feb 2021 01:27 PM

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ. கருப்பையா: தேர்தலில் போட்டியிடுவார் என கமல் அறிவிப்பு

சென்னை

கமலின் மக்கள் நீதி மய்யத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா இணைந்தார். திமுகவிலிருந்து விலகி இருந்த நிலையில் இன்று கமல் முன்னிலையில் அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருடன் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகமும் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வு நேரத்தில் வெற்றிடத்தை நிரப்ப உள்ளதாக ரஜினி அறிவித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கமல் தொடங்கினார். மக்களவைத் தேர்தலிலும் கட்சி போட்டியிட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில் நல்லவர்கள் எங்களுடன் இணையலாம் என கமல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கமலுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமலைச் சந்தித்துப் பேசிய சரத்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். வெற்றி பெற்ற பிறகே முதல்வர் குறித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், பழ.கருப்பையா, செந்தில் ஆறுமுகம் ஆகிய இருவரும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது குறித்து அறிவித்தார். அவர்கள் இருவரையும் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிப்பதாகத் தெரிவித்தார்.

பழ.கருப்பையா காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், காமராஜரின் சீடர். 1969-ல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டபோது காமராஜரின் கீழ் செயல்பட்டார். காமராஜர் மறைவுக்குப் பின் ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் ஜனதா தளக் கட்சியில் இணைந்தார். 1988-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் சூழலில் திமுகவில் இணைந்தார்.

1993-ல் வைகோ பிரிந்து மதிமுகவைத் தொடங்கியபோது மதிமுகவில் இணைந்தார். 1996-ல் மதிமுகவிலிருந்து விலகினார். பின்னர் அரசியலிலிருந்து விலகியிருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். பத்திரிகைகளில் எழுதி வந்தார். பட்டிமன்றப் பேச்சாளர், மேடைப் பேச்சாளராகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

நண்பர் சோவுக்காக துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார். 2010-ம் ஆண்டு துக்ளக் பத்திரிகையில் எழுதிய கட்டுரையால் அவரது வீடு தாக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அவருக்குப் பொறுப்பும் வழங்கப்பட்டது. துறைமுகம் தொகுதியில் 2011-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார்.

தான் சட்டப்பேரவை உறுப்பினராகச் செயல்பட முடியவில்லை, அதிமுக ஆட்சி சரியில்லை என விமர்சித்துப் பேசி, பேட்டி அளித்ததால் அதிமுகவிலிருந்து 2016-ம் ஆண்டு நீக்கப்பட்டார். அதிமுகவை விமர்சித்ததால் இவருக்கு மிரட்டல் வந்தது. பின்னர் கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் இணைந்தார்.

கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுகவுடன் தொடர்பில் இல்லாமல் இருந்த பழ.கருப்பையா திமுகவின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலக் கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணமே எல்லாம் எனக் கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கிவிட்டது என விமர்சித்தார்.

இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுகிறேன் என அறிவித்து விலகினார். பின்னர் வழக்கமான எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திமுக, அதிமுக, திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்நிலையில் அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.

இதேபோன்று சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் மிகப்பெரிய வேலையைத் துறந்து மக்கள் பணியில் சிவ இளங்கோவுடன் இணைந்து சட்டப்பஞ்சாயத்து என்கிற இயக்கத்தை ஆரம்பித்து திமுக, அதிமுக அரசுகளின் செயல்பாடுகளை எதிர்த்துப் போராடி வந்தார்.

ஆர்டிஐ மூலம் பல விஷயங்களை வெளியில் கொண்டு வந்தார். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடும் போராட்டம் நடத்தினார். சசிபெருமாளுடன் இணைந்து இயக்கம் நடத்தினார். கிராம சபைகளைக் கூட்டுவதற்காக பல போராட்டங்களை நடத்தினார். சமீபத்தில் மக்கள் நலக் கூட்டணியில் கிராம சபை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x