சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னையில்  நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை: ராமதாஸ்
Updated on
1 min read

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும் மற்றும் ஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது’’என கூறியிருக்கிறது. இதை கருத்து என்று கூறுவதை விட தமிழக அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்த கண்டனம் என்று கூறுவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

சென்னையில் பெய்த மழை அசாதாரணமானது இல்லை என்றாலும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் அசாதாரணமானவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்த போதிலும் கடந்த 50 ஆண்டு கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

சென்னை மாநகரமே மழையில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் அம்பத்தூரில் குறைந்த வருவாய் பிரிவினருக்கான அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்திருக்கிறது. மொத்தம் 11.5 ஏக்கரில் 2,394 வீடுகளை கட்டுவதற்கான அந்த நிலம் ஏற்கெனவே ஏரியாக இருந்த இடம் ஆகும்.

சென்னை முகப்பேர், வேளச்சேரி ஆகிய இடங்களில் பல வீட்டு வசதித் திட்டங்கள் ஏரிகளில் தான் அரசால் செயல்படுத்தப்பட்டன. ஏரி நிலங்களில் வீடுகளை கட்டுவதற்கான பல தனியார் திட்டங்களுக்கு சதுர அடி கணக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்தது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு கட்சிகளின் அரசுகள் தான். அதனால், அடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவிக்க வேண்டியதும், மழையிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் அவர்கள் தானே தவிர அப்பாவி மக்கள் அல்ல.

சென்னை மாநகரில் எங்கெல்லாம் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படி வடிகால்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in