

தமிழக கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் தனி இடம் பிடித்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் தனது 88 வயதில் இவ்வுலகில் இருந்து விடைபெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டிஅருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 18.5.1932-ல் டேவிட், நவமணி தம்பதிக்கு 4-வதுமகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன். பெற்றோர் இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். அதனால் படிப்பில் சிறந்து விளங்கினார். 1953-ல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்த போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.படித்த கல்லூரியிலேயே ஆங்கில ஆசிரியரான பிறகும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரான பிறகு, ஆங்கில விரிவுரையாளர் பணியைத் துறந்து, முழுநேர அரசியல்வாதியானார்.
ஆங்கில விரிவுரையாளரான அவர், தமிழ் இலக்கியங்களையும் மேடையில் பேசுவதில் வல்லவராகஇருந்தார். கட்சியே வாழ்க்கை என்றுவாழ்ந்தாலும் கட்சிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.ஆனாலும் கொள்கைத் தடம் மாறாமல் சக தோழர்கள் டாங்கே, கல்யாணசுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து ஐக்கிய பொதுவுடைமைக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். 1983 முதல் 2000 வரை அக்கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட்டு வட சென்னைதொகுதியில் 2 முறை எம்பி.யானார்.
கடந்த 2000-ம் ஆண்டில் ஐக்கிய பொதுவுடைமைக் கட்சியை கலைத்து விட்டு மீண்டும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.2005 முதல் 2015 வரை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக இருந்தார். வயது முதிர்வு, உடல் நலப் பிரச்சினைகள் என்று பல சிக்கல்கள் இருந்தாலும் கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடைசியாக கடந்த 18-ம் தேதி மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு, அதே கணீர் குரலில் தா.பாண்டியன் பேசினார். அதுவே அவரது கடைசிப் பேச்சாகவும் அமைந்து விட்டது.
தா.பாண்டியன் எழுத்திலும் வல்லவர். கட்சி பத்திரிகையான ‘ஜனசக்தி’யில் ஏராளமான கட்டுரைகள்எழுதியுள்ளார். இதுவரை 13 சிறுவெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘மேடைப்பேச்சு’, ‘பொதுவுடைமையரின் வருங்காலம்’ ஆகிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தா.பாண்டியன் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்திராகாந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டபோது, அவருக்குப் பின்னால் இருந்த தா.பாண்டியனும் தூக்கிவீசப்பட்டார்.
பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இருந்தது. ஆனால், படுகாயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதிசயமாக உயிர்பிழைத்தார். இந்த அனுபவங்களை 'ராஜீவின் கடைசி மணித் துளிகள்' என்று புத்தகமாக எழுதியுள்ளார். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் இயங்கிய தா.பாண்டியன், தமிழக கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்.