Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

காவிரி – குண்டாறு திட்டத்துக்கு கண்மூடித்தனமாக எதிர்ப்பு காட்டுவதா?- பிரதமராக இருந்தபோதும் பக்குவம் இல்லாமல்தான் நடந்துகொண்டார் தேவகவுடா: திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை

காவிரி – குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பிரதமராக இருந்தபோதும் பக்குவம் இல்லாமல்தான் நடந்துகொண்டார் என்றுதிமுக செய்தி தொடர்பு செயலாளர்வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

காவிரி பிரச்சினை தொடர்பான பல்வேறு வழக்குகள், நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்நீங்கள். தமிழக அரசு அறிவித்திருக்கும் குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் காவிரி சிக்கலில் நியாயம் இல்லாமல் இன்றுவரை பேசி வருகின்றனர். காவிரி கடைமடை நதிநீர் பாத்திய உரிமை தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு உண்டு என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தும் இவர்கள் நீதியை மறைக்கப் பார்க்கிறார்கள்.

கர்நாடகத்தில் அதிகமாக மழைபொழியும்போது, வடிகால் பூமியாகமட்டுமே தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடா, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் வழக்கு தொடரவேண்டும் என்றெல்லாம் சொல்வது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல. எதிர்காலத்தில் தமிழகம் திட்டமிட்டுள்ள தென்பெண்ணை - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஆந்திராவும் பிரச்சினையை உருவாக்கலாம் என்பதை நாம் உணரவேண்டும்.

அவரவர் மாநிலத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது அரசியல்வாதிகளுக்கு வழக்கம்தானே.. குறிப்பாக காவிரிப் பிரச்சினையில் இது காலம் காலமாக அரங்கேறும் அரசியல் அல்லவா?

இருக்கலாம். ஆனால், காவிரி - வைகை - குண்டாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராகப் பேச கர்நாடகத்துக்கு துளியும் அருகதைஇல்லை. இதேமாதிரி சிக்கல் தான்கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையே உள்ள மகதாயி நதிநீர் பிரச்சினையில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காவிரிகடைமடைக்கு நீரைப் பயன்படுத்திக் கொள்வதில் பிரச்சினை என்றால்... மகதாயி நதியும் அதேபோல் கர்நாடக விவசாயிகளுக்கான கடைமடை பகுதிதான். மகதாயி உபரிநீரைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு நியாயம்,காவிரியில் நாம் பயன்படுத்துவதற்கு எதிராக வேறொரு நியாயம் என்று கர்நாடகம் பிழைபட்டுப் பேசுகிறது.

தேவகவுடாவின் அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காவிரி நடுவர் மன்றத் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதிசித்தோஷ் முகர்ஜி, காவிரி டெல்டா மக்களின் பிரச்சினையை அறிய தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்கள் அவரை பூர்ணகும்பத்தோடு வரவேற்றனர். தஞ்சை மாவட்ட கோயில்களுக்கு அவரே வேண்டிவிரும்பி சென்றபோது பரிவட்டம் கட்டப்பட்டது. இவற்றை குற்றச்சாட்டுகளாகச் சொல்லி சித்தோஷ் முகர்ஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தேவகவுடா மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மாநிலங்களை எதிரிகளாகவும் சேர்த்து இருந்தார். பிரதமர் ஆகும் வரை இந்த மனுவை திரும்பப் பெறவில்லை. தமிழகம், புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து வழக்கு தொடுத்த ஒரு மனிதர் எப்படி அனைத்து இந்திய மக்களையும் சமமாகப் பாவிக்கக் கூடிய பிரதமர் பதவியில் இருந்து சமநீதி அளிக்க இயலும்?

இந்தக் கேள்வியை எழுப்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை 28.11.1996-ல்நான் தாக்கல் செய்தேன். அதையடுத்து, தான் தொடுத்திருந்த வழக்கை தேவகவுடா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திரும்பப் பெற்றார். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வழக்கைத்தான் வாபஸ் வாங்கினாரே தவிர, இப்போதும் தன் தகுதிக்கு பொருத்தமில்லாமல் வாட்டாள் நாகராஜ் போல வெறுப்பு அரசியல் பேசிவருகிறார்.

தமிழகத்தின் உரிமைகளைத் தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், அதுகுறித்து ஆணித்தரமாக வாதிடுபவர்களை தமிழக மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதுதான் இந்த நியாயமற்ற கூக்குரல்களுக்கு முடிவு கட்டுவதற்கான வழி.

இவ்வாறு கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x