

கரோனா பரவல் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை தினமும் 5 முறை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை, கடந்த ஆண்டு மார்ச் மாதம்முதல் நிறுத்தப்பட்டது. பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் நிலையில், மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில் இயக்கப்படாமல் இருந்தது.
மேட்டுப்பாளையம் சாலையில்மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன.
இதனால், பயணத் தொலைவு மற்றும் நேரம் அதிகமாகியுள்ளது. கோவைக்கு தினசரி அலுவலகம், வேலைக்கு வந்து செல்வோர், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக ‘இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 5-ம் தேதி விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், பயணிகள் சிறப்புரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் சிறப்பு ரயில் (எண்:06009) மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு, காலை 9.05 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
அதேபோல, கோவை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (எண்:06010), கோவையில் இருந்துமாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மேட்டுப் பாளையம் சென்றடையும்.
வரும் மார்ச் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.