Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்தால் கூடுதல் மானியம்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கரும்பு பயிருக்கு சொட்டுநீர் அமைப்பினை அமைக்கும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் வரை மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது, என நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் 2020-21-ம் ஆண்டிற்கு பொருள் இலக்காக 4800 ஹெக்டேர், ரூ.26.69 கோடி நிதி இலக்காகவும் பெறப்பட்டு, இதுவரை 5668 ஹெக்டேர் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரும்பு பயிர் பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், கரும்பு பயிருக்கு சொட்டுநீர்பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் வரை மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது.

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், கடந்த டிசம்பர் வரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 13 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இதில், பயிர் இழப்பீட்டுத் தொகையாக ரூ.153.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.95 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு சாகுபடியை விவசாயி களிடையே ஊக்குவிப்பதற்காக, வேளாண் இயந்திரக் கருவிகளை வாங்குவதற்காக, அரசு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதியினை வழங்கி வருகிறது. இவ்வாண்டு 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்கள் அனைத்தும் தொகுப்பு நிதியினை பயன்படுத்தி தங்கள் பகுதிக்குத் தேவையான பண்ணை இயந்திரங்களை கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மரவள்ளி சாகுபடி செய்த பகுதிகளில் மரவள்ளி மாவுப்பூச்சி தாக்குதலால் 224.15 ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீட்டு தொகை ரூ.30.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 6 உழவர் சந்தைகளில், நாளொன்றுக்கு சராசரியாக 454 விவசாயிகள் 69 மெ.டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.21.89 லட்சம் மதிப்புள்ள விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். நாமகிரிப்பேட்டை, பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சேமிக்க தலா 25 மெ.டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்குகள் பயன்பாட்டில் உள்ளன, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x