ரியல் எஸ்டேட் துறையில் தலைவிரித்தாடும் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

ரியல் எஸ்டேட் துறையில் தலைவிரித்தாடும் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
Updated on
1 min read

ரியல் எஸ்டேட் துறையில் தலைவிரித்தாடும் ஊழலை கட்டுப்படுத்த, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்போரூரில் பழைய மாமல்லபுரம் சாலையில் 100 ஏக்கர் பரப்பில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது. இந்த வீடுகளுக்கான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தித் தரவில்லை என்று குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய செயல் அதிகாரி, கடந்த 2014-ம் ஆண்டே பணி முடிப்பு சான்றிதழ் வழங்கிவிட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்த புகாரை விசாரிக்க ஆணையம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், இந்த புகாரை 3 மாதங்களில் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பணி முடிப்பு சான்றிதழ்கள் முறையான ஆய்வுக்குப் பின் வழங்கப்படுவதில்லை. கட்டுமான பணிகள் முடிந்துவிட்டால், பணி முடிப்பு சான்றிதழை அதிகாரிகள் வழங்கிவிடுகின்றனர்.

இதுபோன்ற சான்றிதழ்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்குகின்றன. ரியல் எஸ்டேட் தொழிலில், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக்கூறி ரியல் எஸ்டேட் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த புகாரை விசாரித்து 3 மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in