கந்தசுவாமி, ஸ்தலசயன பெருமாள் கோயில்களில் தெப்பல் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

திருப்போரூரில் சரவணப் பொய்கை குளத்தில் நேற்று நடைபெற்ற தெப்பல் உற்சவம்.
திருப்போரூரில் சரவணப் பொய்கை குளத்தில் நேற்று நடைபெற்ற தெப்பல் உற்சவம்.
Updated on
1 min read

திருப்போரூர் கந்தசுவாமி மற்றும் ஸ்தலசயன பெருமாள் கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற கந்தசுவாமி கோயிலில், மாசிமாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வானங்களின் மீது சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வயானையுடன் உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தீர்த்தவாரி மற்றும் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில், பிற்பகலில் சரவணப் பொய்கை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், இரவில், சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வயானையுடன் உற்சவர் கந்தசுவாமி தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து குளத்தில் தெப்பல் வலம் வந்தது.

மாமல்லபுரம் நகரப்பகுதியில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் மாசிமகத்தையொட்டி புண்டரீக புஷ்கரணி தீர்த்த குளத்தில் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் மீது தேவி, பூதேவியருடன் உற்சவர் ஸ்தலசயன பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், குளத்தில் மூன்று முறை தெப்பல் வலம் வந்தது. இன்று கடற்கரை கோயில் அருகே தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. இதில், ஸ்தலசயன பெருமாள் மற்றும் வராஹ பெருமாள் கருட வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருள உள்ளனர்.

திருப்போரூரை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலிலும் நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில், கல்யாண புஷ்கரணி தீர்த்த குளத்தில் தெப்பலின் மீது ரங்கநாயகி தாயாருடன் உற்சவர் கல்யாண ரங்கநாத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கிராம மக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in