

திமுக கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் மா.சுப்பிரமணியன் தலைமையில் கவுன் சிலர்கள் புகார் கொடுத்தனர்.
சென்னை மாநகராட்சி முன் னாள் மேயரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் 23 கவுன்சிலர்கள் நேற்று காலை காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் தெருவில் வசிப்பவர் முத்து. மாநகராட்சியின் 162-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கிறார். கடந்த 22-ம் தேதி இரவு தில்லை கங்கா நகர் 9-வது தெருவில் மழை வெள்ளம் புகுந்ததாக பொதுமக்களிடம் இருந்து முத்துவுக்கு போனில் புகார் வந்தது. இதையடுத்து அவர் அங்கு சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த அதிமுக பிரமுகர் லட்சுமிபதிக்கும் முத்துவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முத்து கடுமையாக தாக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக கவுன்சிலரை தாக்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.