

தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க தி.நகரில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகை வருகிற 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் புதிய ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்க தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் தங்களது கைவரிசையை காண்பிப்பார்கள் என்பதால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும், மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள் ளனர்.
தி.நகர் காவல் துணை ஆணையாளர் சரவணன், உதவி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளை செய்து வருகின்றனர். பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன. தி.நகர் பகுதியில் ஏற்கெனவே 70 இடங்களில் கேமராக்களை பொருத்தி போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். தற்போது கூடுதலாக மேலும் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். 6 இடங்களில் பெரிய டி.வி.க் களை வைத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸார் பார்த்து வருகின்றனர்.
ரங்கநாதன் தெரு - உஸ்மான் சாலை சந்திப்பு, ரங்கநாதன் தெருவில் மாம்பலம் ரயில் நிலையம் அருகில், உஸ்மான் சாலை ஆகிய 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் போலீஸார் நின்று கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு கோபுரத்தில் இருக்கும் போலீஸாருக்கு பைனாக்குலரும் கொடுக்கப்பட்டுள்ளது. ரங்கநாதன் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி நடந்து செல்ல முடிகிறது.
பிக்பாக்கெட் குற்றவாளிகள் 50 பேரின் புகைப்படங்களை அகன்ற திரையில் போலீஸார் ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். “உங்களது கவனத்தை திசை திருப்பி யாராவது உடைமைகளை திருடிச் செல்ல திட்டமிடுவார்கள். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்” என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் கொடுக்கின்றனர்.