

ரயில்வேதுறை தனியார்மய மானால் மக்களுக்கு தான் அதிகமான பாதிப்பு ஏற்படும் என எஸ்ஆர்எம்யு மாநிலத் தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் தெரிவித்தார்.
எஸ்ஆர்எம்யு சார்பில், ரயில்வேதுறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வீரசேகரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சி.ஏ. ராஜா தர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்துக்கு பின்னர் ராஜா தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அரசு ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை வேகவேகமாக மேற்கொண்டு வருகிறது. 400 ரயில் நிலையங்களை தனி யாருக்கு வழங்கி, அவர்களையே அதை நிர்வகிக்கச் செய்ய முடிவு செய்திருப்பதால், பல்லாயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறி யாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்வேதுறையை தனியா ருக்கு வழங்கினால், அதிக வருமானம் கிடைக்கும் மேல் வகுப்பு பெட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இத னால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, ரயில்வேதுறையில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கரோனாவை காரணம் காட்டி பயணிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் பறித்து விட்டு, சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவில்லாமல் பயணம் செய்யும் பயணிகள் குறித்து இந்த அரசுக்கு கவலையில்லை. எங்கு வருமானம் வருகிறதோ அங்கு மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
ரயில்வே தனியார்மயமானால், தொழிலாளர்களுக்கு பாதிப்பு என்றாலும், அது மக்களுக்கு தான் பெரிய பாதிப்பாக அமையும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து எஸ்ஆர்எம்யு தொடர்ந்து போரா டும் என்றார்.