Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார், மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

கோவில்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.

கோவில்பட்டி

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா ஊரடங்கு, புயல் பாதிப்பால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, தலையில் சுமந்தவாறு காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அய்யலுசாமி தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, வழக்கறிஞர் மகேஷ்குமார், மாநில எஸ்சி எஸ்டி அணி துணைத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா செய்தனர்.

பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் வழங்கிய மனுவில், ‘கரோனா ஊரடங்கு, புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவச அரிசி வழங்கினாலும் அதனை சமைப்பதற்கு எரிவாயு உருளை தேவைப்படுகிறது. இப்போதுள்ள விலை ஏற்றத்தால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு சமையல் எரிவாயுசிலிண்டர் என ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

வள்ளுவர் நகர் முதல் தெருவில் நடந்த போராட்டத்துக்கு ஜனநாயக மாதர் சங்க நகரச் செயலாளர் மலர்விழி உமா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நகரப் பொருளாளர் பழனியம்மாள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x