Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினியிடம் நிச்சயம் விசாரிக்கப்படும்: ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே 24 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 25-வது கட்ட விசாரணை நீதிபதி தலைமையில் கடந்த 22-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. வாகனங்கள் எரிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் சம்பவத்தில் காயமடைந்த போலீஸாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 26 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இது குறித்து ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 943 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 640 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். 1,089 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 400 பேரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. அடுத்த கட்டமாக காயமடைந்த 100-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தவுள்ளோம்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கலவரத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டதாக முதலில் 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அவர்களிடம் ஏற்கெனவே விசாரித்துள்ளோம். தற்போது சிபிஐ கூடுதலாக 44 பேரை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தவுள்ளோம்.

ஆணையத்தில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது. காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த முடியுமா என்று அவர் கேட்டிருந்தார். அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அவரது வழக்கறிஞரிடம் கூறியுள்ளோம். ஒருவேளை அவர் இங்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், சென்னையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளோம். அதுபற்றி இதுவரை அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. கண்டிப்பாக அவரிடம் விசாரிப்போம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x