

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் திட்ட ஊழலால் உண்மை யான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர் என குறைதீர்வுக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ் சாட்டினர்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “கண்ணமங்கலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புக்கான தொகை ரூ.26 கோடி மற்றும் 5 ஆண்டுகளாக நிலுவைத் தொகையை தரணி சர்க்கரை ஆலை வழங்கவில்லை.
இதேபோல், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அருணாச்சலா சர்க்கரை ஆலையும், விவசாயிகளுக்கு ரூ.16 கோடி வழங்க வேண்டும். எனவே, பேரிடராக அறிவித்து, சர்க்கரை ஆலைகளை கையகப்படுத்தி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் கிசான் திட்டத்தில் தி.மலை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு சில அலுவலர்களின் இந்த செயலால், உண்மையான விவசாயிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை.
தி.மலை மாவட்டத்தில் சமீபத் தில் தாக்கிய 2 புயல்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பாசனக் கிணறுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த கிணறுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். பால்கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுகிறது.
குடிமராமத்துப் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கீழ்பென்னாத்தூர் உட்பட மாவட்டம் முழுவதும் ஏரியை அளவீடு செய்து கல் பதிக்காமல் தூர் வாரப்பட்டுள்ளது. ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதனை, விரைவாக வழங்க வேண்டும்” என்றனர்.
இதையடுத்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் ஏற்கெனவே அமைக் கப்பட்ட 38 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்படும். கூடுதல் இடங்கள் தேவை என்றால், விவசாயிகள் மனுவாக அளிக்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வேலை அட்டை வழங்கப்படும்” என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.