Published : 27 Feb 2021 03:18 AM
Last Updated : 27 Feb 2021 03:18 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி, 14 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்: திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி டாக்டர் விஜயகுமார் தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 சோதனைச் சாவடிகளில் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனைகள் தொடங்கியுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. மே-2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட எல்லை களில் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும், அவ் வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும் என காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறும்போது, ‘‘தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களையொட்டி உள்ளது. எனவே, மாநில எல்லைகளான தகரகுப்பம், மாதகடப்பா, கொத்தூர் மற்றும் கொல்லம்பள்ளி ஆகிய 4 சோதனைச்சாவடிகளும், மாவட்ட எல்லைகளான சுந்தரம் பள்ளி, தோரம்பதி, பேரணாம்பட்டு, லட்சுமிபுரம், காவலூர், தீர்த்தம், மாதனூர், உமராபாத், அம்பலூர் உள்ளிட்ட 10 சோதனைச்சாவடிகள் என மொத்தம் 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சோதனைச்சாவடி யிலும் 1 உதவி காவல் ஆய்வாளர் தலைமையில், 4 காவலர்கள், வருவாய்த் துறையினர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்யவும், அதை வீடியோ மூலம் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு இடையே மதுபானங்களை கொண்டு செல்வது, ரவுடிகள் நடமாட் டம், குற்றச்செயல்களில் ஈடுபடும்குற்றவாளிகளை கண்காணிக் கவும், பணம் பட்டுவாடா உள்ளிட்ட செயல்பாட்டை தடுக்க தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சித்தலைவர்கள் வருகை, தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், வீதி பிரச்சாரம் என எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் அளித்து முறையான அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x