

தாம்பரத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப். 26) நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு தாம்பரம் கோட்டாட்சியரும், தாம்பரம் சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
மண்டல தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி வழங்குவது, தேர்தல் விதிமுறைகளை கையாள்வது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது, கட்சி முகவர்கள், வாக்காளர்களை முறைப்படுத்துவது குறித்த விதிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
"மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் குறித்த விபரங்களையும் அதற்கான வழித்தடங்களையும் அறிந்து இருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், இருக்கைகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருந்தால் மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
மண்டல அலுவலர்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாறுதல் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
மேலும் வாக்குச்சாவடிகளில் கைபேசி மற்றும் தொலைபேசி இணைப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி இல்லாத ஊர்வலங்கள், வாகனங்கள், சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு அருகில் உள்ள தேர்தல் தொடர்பான அலுவலர்களின் தொலைபேசி எண் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் தொடர்பான இதர படிவங்கள் வந்து சேர்ந்துவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் காவல் துறை துணை நிலை படையினர் வரப்பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில் மாற்று மின்னணு வாக்கு பதிவு எந்திரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியான முறையில் சீல் இடப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக, காவல் துறை பாதுகாப்புடன் வாக்குபதிவு எந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாம்பரம் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பல அலுவலர்கள் பங்கேற்றனர்.