Published : 26 Feb 2021 04:49 PM
Last Updated : 26 Feb 2021 04:49 PM

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா; முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இடஒதுக்கீடு கோரி, பாமக மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று (பிப். 26), வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, மிக பிற்படுத்தப்பட்ட/சீர்மரபினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என மொத்தம் 69% இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில், 'எம்பிசி-வி' என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. 20% இடஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு ஆகும்.

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது. அதன் அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"1985 ஆம் ஆண்டில் ஜே.ஏ.அம்பாசங்கர் ஐஏஎஸ் (ஓய்வு) தலைமையில் தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களின் மக்கள்தொகையை மதிப்பிட்டு தமிழ்நாட்டில் அப்போது இருந்த அனைத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களின் பின்தங்கிய நிலையைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்கள் மற்றும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 45/1994) கீழ் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்களான கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசின் கீழ் வரும் பணிகளில் பதவிகளும் மற்றும் நியமனங்களிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்காக முறையே 30% மற்றும் 20% இட ஒதுக்கீடு வழங்கி தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர், பிற சாதியினர் மற்றும் சமூகத்தினருடன் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு, அவர்களுக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற இயலவில்லை என்பதால், கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்த வன்னியகுல சத்திரியர்களுக்கு தனிப்பட்ட உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக அவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் சாதிகளுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக ஜெயலலிதா 2012-ம் ஆண்டே அரசாணை எண் 35-ன்படி அமைக்கப்பட்ட ஜனார்த்தனம் தலைமையிலான ஆணையத்திற்கு அனுப்பி, பரிசீலனை செய்து, உள் ஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாணையம் இந்த பொருள் பற்றி பரிசீலனை செய்து, சமர்ப்பித்த அறிக்கை அரசின் பரிசீலனையில் இருந்துவந்த நிலையில் அந்தப் பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு உரிய சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவர அரசு கருதியது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்கள் சமச்சீரான வளர்ச்சியைப் பெற்று முன்னேற்றுவதற்காகவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு உரிய விகிதாச்சார வாய்ப்பினை பெறுவதற்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் சில குறிப்பிட்ட சாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு 7 சதவீதமும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சாதி பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் ஆகிய மூன்று உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு தற்போது பரிந்துரை செய்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான ஆணையத்தின் மேற்கண்ட பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவும், அதற்கிணங்க மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவினருக்கிடையே விகிதாச்சார அடிப்படையில் உள் ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன உள் ஒதுக்கீட்டு முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகின்றது. 2012-ம் ஆண்டு ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

அதோடு, இந்த ஒதுக்கீடானது தற்காலிகமாக வழங்கப்படுகிறது. இன்னும் 6 மாத காலத்திலே சாதிவாரியாக கணக்கெடுப்பதற்காக இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு அந்தப் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. அது ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வருகின்ற போது அதனை மாற்றியமைக்கப்படும். இடஒதுக்கீட்டுக்காக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து தங்களுக்கு இந்த இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார்கள். அதை எல்லாம் கருத்திலே கொண்டு தான் இன்றைக்கு இதை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்".

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x