

திமுகவுடன் நடத்தப்பட்ட முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எவ்வித பிரச்சினையோ இழுபறியோ இல்லை என்று காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
திருநெல்வேலியில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 2-ம் கட்டமாக கோவை, ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், கரூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அனைத்து தரப்பு மக்களுக்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேரு குடும்பத்தின்மீது தமிழக மக்களுக்கு அன்பும், ஈர்ப்பும் இருப்பதை இது வெளிக்காட்டியது. 3-ம் கட்டமாக தென்மாவட்டங்களில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் 5 கட்டங்களாக அவரது சுற்றுப்பயணத்துக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பொதுமக்களை அவரை சந்தித்து வாக்கு சேகரிப்பார்.
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி எல்லைமீறி, நாகரிகம் குறைவாக பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் அவர் விமர்சித்துள்ளார். பிரதமர் என்ற நிலையிலிருந்து கீழே இறங்கி அவர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய்கூட இவ்வாறு பேசியதில்லை. சர்வாதிகார மனப்பான்மையுடன் பேசியது பிரதமருக்கு அழகல்ல. அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது.
பாஜகவினரால் செய்யப்பட்டிருந்த விளம்பரங்களில் எம்.ஜி.ஆர்., காமராஜர் போன்ற தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. காமராஜருக்கும் பாஜகவுக்கு என்ன தொடர்பு என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் படங்களைப் போட்டு கூட்டம் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் கைதேர்ந்தவரான கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து திமுக தலைவரிடம் தெரிவிக்கப்பட்டபின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் எவ்வித குழப்பமும் இல்லை. பேச்சுவார்த்தையில் எவ்வித இழுபறியும் இல்லை. பேச்சுவார்த்தையின்போது நடைபெற்ற கருத்து பரிமாற்றங்கள் குறித்து நாங்கள் வெளியே சொல்லவில்லை.
கண்ணியத்துடன் காங்கிரஸ் நடந்து கொள்கிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். புதுச்சேரியில் பிரதமர் மோடியால்தான் ஆட்சி கவிழந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.