Last Updated : 26 Feb, 2021 04:02 PM

 

Published : 26 Feb 2021 04:02 PM
Last Updated : 26 Feb 2021 04:02 PM

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் காரைக்கால் வருகை; ஏற்பாடுகள் குறித்து பாஜக நிர்வாகிகள் ஆய்வு

காரைக்காலில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசவுள்ளார்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள காரைக்கால் சந்தைத் திடலில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா, மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், வி.கே.கணபதி, முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோர் ஏற்பாடுகள் குறித்து இன்று (பிப். 26) ஆய்வு செய்தனர்.

பின்னர் வி.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) காரைக்கால் வரவுள்ளார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை வந்தடைகிறார். அங்கிருந்து, இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

பின்னர் காரைக்கால் சந்தைத் திடலில் காலை 10.30 மணியளவில் 'மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி' என்ற முழக்கத்துடன் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இதில், 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். கூட்டத்துக்குப் பின்னர் மதியம் 1 மணிக்கு, கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அமித் ஷாவின் வருகை காரைக்காலில் பெரிய அரசியல் மாற்றத்தை அளிக்கும்.

புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வியூகத்தை அமித் ஷா வகுக்கவுள்ளார். நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்துக்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பாஜக முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாரகிவிட்டது" என்றார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதா என முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என்றார். பாஜகவில் தற்போது எப்படி உள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, "நன்றாக இருக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x