

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 2 சதவீதம் (சுமார் ரூ.1.40) குறைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டுக் கொண்டிருக்கிறது. சில நகரங்களில் ரூ.100-ஐயும் தாண்டிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையை 2 சதவீதம் (சுமார் ரூ.1.40) குறைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி, துணைநிலை ஆளுநர் வாட் வரி விகிதத்தை 2 சதவீதமாகக் குறைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாகப் புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டொன்றுக்கு சுமார் 71 கோடி ரூபாய் வரை மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.