கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு - 5 ஆயிரம் குடிசைகள் சேதம்; நெய்வேலியில் 48 செ.மீ. மழை பதிவு

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு - 5 ஆயிரம் குடிசைகள் சேதம்; நெய்வேலியில் 48 செ.மீ. மழை பதிவு
Updated on
2 min read

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப் பெருக்கில் இதுவரை 28 பேர் உயிரிழந் திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழையால் 5 ஆயிரம் குடிசைகள் முற்றிலுமாக சேத மடைந்திருப்பதோடு, 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள் ளன.

வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த9-ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையினால் மாவட்டத்தின் உட்பகுதிகளான பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், நெய் வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணை நல்லூர் ஆகிய இடங்களில் சராசரியாக 38 செ.மீ. மழை பெய்தது. நெய்வேலியில் அதிக பட்சமாக 48 செ.மீ மழை பதிவானது. நெய்வேலி நகரின் பிரதான சாலைகளிலும் குடியி ருப்புப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. பண்ருட்டி வட்டம் விசூர், பெரியக் காட்டுப்பாளையம், குடியிருப்பு, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் சிறிய வாய்கால்கள் உடைத்து கொண்டு குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. விசூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டிட வீடுகளும், குடிசை வீடுகளும் சேதமடைந்தன. வெள்ளத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 28 பேர் உயிர் இழந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

இறந்தவர்கள் விவரம்

பெரியக் காட்டுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெருமாள்(65), இவரது மருமகன் சிவசங்கரன்(42), மகள் செல்வி(35), பேரன்கள் சிவா(15), மாரிமுத்து(13), வீரமுத்து (6), பவானி(5), தினேஷ்(5) இவர்கள் அனைவரும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். இது தவிர நடேசன்(55) மற்றும் பச்சையம்மாள்(50) ஆகிய இருவரும் இறந்தனர். விசூர் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா(18), அவரது தாயார் வாசுகி(35) வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை(55), காடாம்புலியூரை அடுத்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர்(23) என்ற இளைஞர் காட்டாற்று வெள் ளத்தை செல்போனில் பிடிக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

குறிஞ்சிப்பாடியில் எஸ்கேவி நகரை சேர்ந்த பாலமுருகன்(34) என்பவர் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். உதயக்குமாரி(65) என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். பண்ருட்டியை சேர்ந்த பூமிகா(11) என்ற சிறுமி கோரணப்பட்டு அருகே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். பூதம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (34), கல்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-லோகநாயகி தம்பதியினரும் வெள்ளநீரில் சிக்கி இறந்தனர்.

ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த கணேசன்(58), பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன் பேட்டையைச் சேர்ந்த ஞானமுத்து(65), கருக்கை யைச் சேர்ந்த அலமேலு(60), ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பரசுராம்(40), குமணன்குளத்தைச் சேர்ந்த வேலு(29), வடகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ் ணன்(68), எல்லப்பன்பேட்டை யைச் சேர்ந்த விக்னேஷ்(4), கடவாச்சேரியைச் சேர்ந்த ராமு(40) ஆகியோரும் உயிரிழந்தனர்.

மழை அளவு

கடலூர் மாவட்டம் நெய்வேலி யில் அதிகபட்சமாக 48 செ.மீ மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேத்தியாத் தோப்பில் 32.5 செ.மீ, சிதம்பரத் தில் 31.4 செ.மீ., பரங்கிப்பேட்டை யில் 31.6 செ.மீ, பண்ருட்டி யில் 20.4 செ.மீ. மழை பதிவானது.

காட்டாற்று வெள்ளத்தினால் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட 9 வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, மரவள்ளி, சவுக்கை என சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிய நிலையில் காணப்படுகிறது. காட்டாற்று வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பினால் கடலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் குடிசைகள் சேதமடைந்துள்ளன. இது தவிர்த்து 500-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. பேரிழப்பு ஏற்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கமாண்டன்ட் வர்மா தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 85 பேர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

என்எல்சியில் பாதிப்பு

கனமழை எதிரொலியாக என்எல்சி நிறுவன சுரங்கப் பணிகள் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. திறந்தவெளி சுரங்கம் என்பதால் மழைநீர் அதிகளவில் தேங்கியிருப்பதால், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தடைபட்டிருப்பதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் தேங்கியுள்ள தண்ணீரை ராட்சத மின் மோட் டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இருப்பில் உள்ள பழுப்பு நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், என்எல்சியில் தற்போது மின்உற்பத்தி 800 மெகாவாட் ஆக உள்ளது. என்எல்சி மொத்த மின் உற்பத்தி அளவு 3 ஆயிரம் மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாளில் மின் உற்பத்தியை சகஜ நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என என் என்எல்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in