கல்விக் கட்டண விவகாரம்; ராஜா முத்தையா பல் மருத்துவ மாணவர்களைத் தமிழக அரசு ஏமாற்றுவது சரியல்ல: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ராஜா முத்தையா பல் மருத்துவ மாணவர்களைத் தமிழக அரசு ஏமாற்றுவது சரியல்ல என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முத்தரசன் இன்று (பிப். 26) வெளியிட்ட அறிக்கை:

"சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் எனச் சென்ற ஆண்டு பட்ஜெட்டில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது.

இக்கல்லூரிகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட கூடுதலாகக் கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. இதை எதிர்த்து, அக்கல்லூரிகளின் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அக்கல்லூரிகளின் கட்டணங்களை, இதர தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைத்திட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இப்பொழுது படிக்கும் அனைத்து மாணவர்களின் கட்டணங்களும் உடனடியாகக் குறைக்கப்படும் என உறுதி அளித்த தமிழக அரசு, தற்பொழுது இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும், கட்டண பாக்கிகளையும் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

கல்விக் கட்டணக் குறைப்பு ஆணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள கட்டண பாக்கிகளையும் ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கான தேர்வுகளை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மூலம் நடத்திட வேண்டும். அனைத்துத் தரப்பு மாணவர்களும் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்கள் முழுவதையும் தமிழக அரசே திருப்பி செலுத்திட வேண்டும்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in