போக்குவரத்துத் தொழிலாளர்களை அவமதிக்கிறார்கள்; வேலைநிறுத்தம் தீவிரப்படுத்தப்படும்- சிஐடியு தகவல்

போக்குவரத்துத் தொழிலாளர்களை அவமதிக்கிறார்கள்; வேலைநிறுத்தம் தீவிரப்படுத்தப்படும்- சிஐடியு தகவல்
Updated on
1 min read

போக்குவரத்துத் தொழிலாளர்களை அவமதிக்கிறார்கள். எங்களின் வேலைநிறுத்தம் தீவிரப்படுத்தப்படும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் 1.30 லட்சம் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி, 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இதைக் கண்டித்தும், வரும் தேர்தலுக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரியும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட மொத்தம் 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ‘தொழிலாளர்களின் சேமிப்புப் பணத்தை நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று அதிகாலை முதல் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான பணிமனைகளில் இருந்து முழு அளவில் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. எனினும் அரசு இதுவரை போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதற்கிடையே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் செளந்தரராஜன், ''ஒப்பந்தம் ஏற்கெனவே அமலில் இருக்கும்போதே இது வேண்டாம் எங்களுக்குப் புதிய ஒப்பந்தம் வேண்டும் என்று கேட்டால் தவறு, ஆனால் ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்கள் ஆகிவிட்டன.

ஆனால் அரசு இதுவரை எங்களை அழைத்துப் பேசவில்லை. நாங்கள் 10 முறை போராட்டம் நடத்தினால், ஒருமுறை எங்களை அழைத்து, சடங்குக்காகப் பேசும் அரசு எங்களை ஏமாற்றி அனுப்புகின்றது. அது தொழிலாளர்களை அவமதிக்கும் செயல். கடுமையாக எங்களின் உழைப்பை இழிவு செய்கிறார்கள். இது அரசுக்கு நல்லதல்ல.

எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தீவிரப்படுத்தப்படும் . தமிழகம் முழுவதும் போக்குவரத்துப் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்'' என்று சிஐடியு செளந்தரராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in