Published : 26 Feb 2021 12:35 PM
Last Updated : 26 Feb 2021 12:35 PM

தா.பாண்டியன் உடல் பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்; நாளை சொந்த ஊரில் அடக்கம்: முத்தரசன் தகவல்

சென்னை

மறைந்த மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தி.நகர் கட்சி அலுவலகத்தில் இன்று இரவு வரை வைக்கப்படும். நாளை மதியம் மதுரையில் சொந்த ஊரில் உடல் அடக்கம் என முத்தரசன் அறிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாட்டின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் தா.பாண்டியன் மறைவையொட்டி, வருகிற 04.03.2021-ம் தேதி வரை ஒருவார காலம் துக்கம் கடைப்பிடிக்கப்படும்.

கட்சியின் அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என மாநிலச் செயற்குழு கட்சி அமைப்புகளையும், உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறது.

அவரது உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் அஞ்சலிக்காக இன்று மதியம் 2 மணிவரை டி.வி.எஸ் நகர், 48-வது தெரு, அண்ணா நகர், (மேற்கு விரிவாக்கம்), சென்னை - 600 101 உள்ள இல்லத்திலும்,
இன்று (பிப்.26) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி “பாலன் இல்லம்”, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தி.நகரிலும் வைக்கப்படும்.

தொடர்புக்கு. போன் : 044- & 24343004

அவரது உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. நல்லடக்கம் பிப்.27 (நாளை) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழ் வெள்ளை மலைப்பட்டியில் உள்ள டேவிட் பண்ணை தோட்டத்தில் 2 மணிக்கு நடக்கிறது''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x