Published : 26 Feb 2021 11:56 AM
Last Updated : 26 Feb 2021 11:56 AM

6 சவரன் வரையிலான கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

ஏழை மக்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கூறியிருப்பதாவது:

“2019-20ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.

இப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைக் காக்க தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு வருகின்றது.

இந்நிலையில், கரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாயத் தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். கரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை.

இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், இதுகுறித்துப் பெறப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும், கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்று திரும்பச் செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்துப் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்கான அரசாணை பின்னர் வெளியாகும்.

சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x