

விற்பனையில் எடை குறைவு, முத்திரையிடப்படாத எடையளவுகளைப் பயன்படுத்தியதாக 419ரேஷன் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் ஆணையர் எம்.வள்ளலார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிலாளர் துறை அதிகாரிகளால் பிப்.18 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள 1,083 ரேஷன் கடைகள் மற்றும்கிடங்குகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், எடை குறைவாகபொருட்கள் விற்பனை, மறுமுத்திரை இல்லாத எடையளவுகளைப் பயன்படுத்தியது என 419 கடைகளில் முரண்பாடுகள்கண்டறியப்பட்டு, அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் படி, உப்பு பொட்டலங்களில் இருக்க வேண்டிய சட்டப்படியான அறிவிப்புகள் கொண்ட பொட்டலங்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து 722 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 கடைகளில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.
பெட்ரோல் பங்க்குகள்
இதேபோல் கடந்த 2 மாதங்களில் 317 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் இணக்க கட்டணமாகவும், பெட்ரோல் பங்க்குகளில் அளவு குறைவு காரணமாக 21 விதிமீறல்கண்டறியப்பட்டு ரூ.43 ஆயிரம் இணக்கக் கட்டணமாகவும், பொட்டலப் பொருட்கள் விதியை மீறிய வகையில் 121 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் இணக்க கட்டணமாகவும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.