

நீர்நிலைகளில் ஆட்சேபகரமான பகுதிகளில் வசிப்போருக்கு மாற்றுஇடம் வழங்கப்படும். அப்பகுதியிலேயே பட்டா வழங்க அனுமதி இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தில் மதுரை வடக்கு தொகுதி அதிமுக உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசும்போது, ‘‘கண்மாய் புறம்போக்கு, கால்வாய் புறம்போக்கு பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
நீர்நிலை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்ந்து போயிருந்தாலும் அப்பகுதிகளை மாற்றக் கூடாது. அவற்றை சீரமைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அப்பகுதிகளில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு பட்டா வழங்கப்படுகிறது.
நீர்நிலைகளில் ஆட்சேபகர மான பகுதிகளில் வசிப்போருக்கு அப்பகுதியிலேயே பட்டா வழங்க தற்போது அனுமதி இல்லை.
அதிமுக ஆட்சியில் ஒரே அரசாணை மூலம் 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 25.28 லட்சம் பேருக்கு பட்டா வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.