Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் கொடுக்க சென்றபோது சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸ் காரை வழிமறித்த அதிகாரிகள்: கார் சாவியை பறித்து எச்சரித்ததாக தகவல்

கோப்புப் படம்

சென்னை

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகார் கொடுக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் காவல் துறை அதிகாரிகள் சிலர் தடுத்து நிறுத்தியது தெரியவந்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர்டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புகார் குறித்துவிசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புகார் கொடுக்க விடாமல் பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுக்க முயற்சி நடந்ததும் தெரியவந்துள்ளது.

ராஜேஷ்தாஸ் மீது புகார் கொடுப்பதற்காக, பெண் ஐபிஎஸ் அதிகாரிதனது காரில் சேலத்தில் இருந்துசென்னைக்கு கடந்த 22-ம் தேதிவந்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ்தாஸ், தனக்கு நெருக்கமான ஐ.ஜி.மற்றும் எஸ்.பி.யை சமாதானம் பேச அனுப்பியுள்ளார். அவர்கள் இருவரும் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிரடிப் படை காவலர்கள் மூலமாக, பெண் எஸ்.பி.வந்த காரை மறித்துள்ளனர். பின்னர், புகார் கொடுக்க வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்தி, அவரை திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொரு உயரதிகாரியும், ஒரு டிஎஸ்பியும் சமாதானமாக போய்விடுமாறு பெண் எஸ்.பி.யிடம் வலியுறுத்தி கூறியுள்ளனர். அவரை சென்னை செல்லவிடாமல் தடுக்கும் விதமாக, கார் சாவியையும் அவர்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. ‘டிஜிபியை பகைத்துக் கொள்வது நல்லது அல்ல’ என்றுடிஎஸ்பி பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியதாகவும் தெரிகிறது.

ஆனாலும், பெண் அதிகாரி தொடர்ந்து உறுதியாக இருந்து, டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார். தவிர, இந்த விவகாரத்தில் ராஜேஷ்தாஸுக்கு ஆதரவாக இருந்து, புகார் கொடுப்பதை தடுக்க முயன்ற அதிகாரிகள் பெயரையும் டிஜிபியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், சமாதானம் பேசிய அதிகாரிகளிடமும் விசாகா கமிட்டி விசாரணை நடத்த உள்ளது. முதல்கட்டமாக, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் விசாகா கமிட்டி ரகசிய விசாரணை நடத்தும். அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்படும்.

ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

இதற்கிடையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பணியிடங்களில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் துணை நிற்கும். விசாரணை கமிட்டி சுதந்திரமாக, நியாயமாக, விரைவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x