Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கம்; பொதுமக்கள் அவதி: போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை

புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துதொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர். தமிழகம் முழுவதும் சராசரியாக 50 சதவீத அரசு பேருந்துகளே இயக்கப்பட்டன. போதிய பேருந்து வசதிஇல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் 1.30 லட்சம் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி, 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.

இதைக் கண்டித்தும், வரும் தேர்தலுக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கோரியும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட மொத்தம் 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

‘தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தைநிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று அதிகாலை முதல் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.

ஒழுங்கு நடவடிக்கை

இதனால், பெரும்பாலான பணிமனைகளில் இருந்து முழு அளவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. பணிஓய்வு, வார ஓய்வு, மாற்றுப்பணி ஓய்வு அனுமதி பெற்றவர்களுக்கு அவை ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்புமாறு நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது. பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.

அண்ணா தொழிற்சங்கம் மற்றும் போராட்டத்தில் பங்கேற்காத சில தொழிற்சங்கத்தினரைக் கொண்டு நேற்று கணிசமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, தமிழகம் முழுவதும் சராசரியாக 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. நகர, மாவட்ட மற்றும்வெளியூர் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டதால், பயணிகள் அவதிப்பட்டனர்.

வேலைநிறுத்தம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் சிலர் வெளியூர் பயணத்தை தவிர்த்தனர். பேருந்துகளுக்காக சில இடங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

கூடுதல் கட்டணம்; மக்கள் அவதி

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதால், பேருந்துகளுக்காக பல மணிநேரமாக காத்திருந்த மக்கள் ரூ.100 முதல் ரூ.250 வரை கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் சென்றனர். பலர் மின்சார ரயில்களிலும் சென்றனர். மற்ற ஊர்களில் கணிசமான அளவுக்கு தனியார் பேருந்துகளில் மக்கள்பயணம் செய்தனர். சென்னை உட்படஅனைத்து இடங்களிலும் இரவு 7 மணிக்குபிறகு, பேருந்துகள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால், பேருந்துநிலையங்கள், நிறுத்தங்களில் ஏராளமானோர் காத்திருந்தனர்.

50 சதவீத பேருந்துகள் இயக்கம்

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தவிர அண்ணா தொழிற்சங்கம் உட்பட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு பயணிகளின் தேவைக்கு ஏற்ப, பேருந்துகளை இயக்கி வருகிறோம். சென்னையில் 57 சதவீத பேருந்துகளும், மற்ற பகுதிகளில் சராசரியாக 50 சதவீத பேருந்துகளையும் இயக்கி வருகிறோம். வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்துள்ளனர்’’ என்றனர்.

போராட்டம் தொடரும்

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் நடராஜன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறியபோது, ‘‘பெரும்பாலான தொழிலாளர்கள் எங்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் இருப்பதால், பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. சுமார் 18 சதவீத பேருந்துகள் மட்டுமே ஓடின. அரசு அறிவித்துள்ளஇடைக்கால நிவாரணம் போதாது. அந்தநிவாரணத் தொகை எப்போது முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெளிவுபடுத்தவில்லை. எனவே, போராட்டம் தொடரும். தமிழகம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அரசு எப்போது அழைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x