தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை: உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை

தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை: உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை
Updated on
1 min read

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (88),வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால்
அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் பெரிய
அளவில் முன்னேற்றம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலையை கவனித்து வருகிறார்கள். தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டி
யனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விரைந்து நலம் பெற்று மக்கள் சேவை தொடர விழைகிறேன்.’’ என தெரிவித்துள்ளார்.

டி.ராஜா வருகை

செய்தி அறிந்த கட்சியின்அகில இந்தியப் பொதுச்செயலாளர் டி.ராஜா, மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தமீம்முன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரித்து சென்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பதிவில், தா.பாண்டியன் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென விரும்புகிறேன்.’’ என அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in