Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாதிரி சாலை திறப்பு

கோவை மாநகராட்சி சார்பில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில், ரூ.24.71 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, உள்ளாட் சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார். விழாவுக்கு மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார்.

மாதிரி சாலையின் சிறப்புகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: டி.பி.சாலை தொடக்கம் முதல் காந்திபார்க் செல்லும் பகுதி வரை மொத்தம் 1.80 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சாலையின் இருபுறமும் தலா 2 மீட்டர் அகலத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நடந்து செல்லும் பொதுமக்கள் ஓய்வெடுக்க, கிரானைட் கற்களால் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.புரத்தின் பழைய பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் பழங்கால தோற்றத்தின் அடிப்படையில் வீதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சாலையின் இருபுறங்களிலும் மொத்தம் 50 இடங்களில் திருக்குறளும், அதன் விளக்கமும், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படத் தொகுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

தபால் நிலையம் சந்திப்புப் பகுதியில், கண்ணைக் கவரும் வகையில் ‘பிரிட்டிஷ் டவர் கிளாக்’ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ‘காபுல் ஸ்டோன்’ என்ற புதுவகையான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகே 8 அடி உயரம் 16 அடி அகலத்துடன் பாலிகார்ப்ரேட் பொருட்கள் மூலமாக ‘தேவதையின் இறக்கை’ வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. ‘செல்ஃபி ஸ்பாட்’ ஆக இது மக்களிடம் வரவேற்பை பெறும். வயர்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ஜூனன், வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி நிறுவன முதன்மை செயல் அலுவலர் ராஜகுமார், மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x